top of page

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தலைவர்கள் வாழ்த்து!


நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாட்டில் உள்ள அனைத்து சமூகத்திற்கும் உற்சாகம், மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விழாவாக இந்த விநாயகர் சதுர்த்தி இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்த விநாயகர் சதுர்த்தி கொரோனாவில் இருந்து விடுபட்டு மக்கள் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள விநாயகர் சதுர்த்தி வாழ்த்தில், விநாயகரின் ஆசி நம்முடன் எப்போதும் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த நல்ல நாளில் மக்களிடத்தில் மகிழ்ச்சி மற்றும் செழிப்பு பொங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது இல்லத்தில் குடும்பத்தினருடன் வழிபாடு மேற்கொண்டார். விநாயகர் சிலை வைத்து, பொங்கல், சுண்டல், கொழுக்கட்டை உள்ளிட்டவைகளை படையலிட்டு சிறப்பு பூஜை மேற்கொண்டார். முதல்வருடன், அவரது மனைவி ராதா மற்றும் மகன் மிதுன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதேபோன்று, புதுச்சேரியில் உள்ள பிரசித்திப்பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி சிறப்பு வழிபாடு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, கொரோனா தொற்று நீங்கி, மக்கள் சகஜ வாழ்க்கைக்கு திரும்பி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்ததாக கூறினார்.


Comments


bottom of page